திங்கள், 13 டிசம்பர், 2010

பொறையாறு அருகே தில்லையாடியில் முதுமக்கள் தாழி கண்டெடுப்பு

பொறையாறு அருகே தில்லையாடியில் 2 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முற்பட்ட முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டுள்ளது.


நாகை மாவட்டம், பொறையாறு அருகே தில்லையாடி சவுக்கடித் தெருவை சேர்ந்தவர் நளபூபதி. இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி நிமா நேற்று தனது வீட்டின் பின்புறத்தில் கழிவறை கட்டுவதற்காக மண்ணை தோண்டினார். அப்போது பூமிக்கு அடியில் சுமார் 8 அடி ஆழத்தில் வித்தியாசமான சத்தம் கேட்டது. மேலும் தோண்டியபோது அங்கு ஒரு பெரிய மண் பானை இருந்தது.

இது குறித்து நாகை கலெக்டர் முனியநாதன் மற்றும் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அங்கு சென்று பார்த்த போது, அது 2 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முந்தைய முதுமக்கள் தாழி என்று தெரியவந்தது. இது குறித்து தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை காப்பாட்சியர் முத்துசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

பூமிக்கு அடியில் 8 அடி ஆழத்தில் கண்டெடுக்கப்பட்ட இந்த மண்பானை முதுமக்கள் தாழியாகும். இது 5 அடி உயரம் உள்ளது. மேல்வாய் விட்டம் 2-1/2 அடி, சுற்றளவு 4 அடி பூமிக்கு அடியில் திறந்த நிலையில் உள்ளது. அதன் உள்ளே சிவப்பு நிறத்தில் 2 மண் கலயம், கருப்பு நிறத்தில் 2 மண் கலயம் உள்ளன. மேலும் மண் தட்டு இரண்டு, 4 கிண்ணங்கள், கெட்டியாகி கல்லாகி போன மனித பல் வரிசை ஒன்றும் இருந்தது.

முதுமக்கள் தாழி அருகில் வெளிபுறத்தில் 3 அடி நீளம் கொண்ட போர் வாள் ஒன்று கைப்பிடி உறையுடன் இரண்டாக உடைந்த நிலையில் இருந்தது. இது 2 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பெரும் கற்காலத்தை சேர்ந்ததாகும். போர்படை தளபதி ஒருவரை இதில் வைத்து அடக்கம் செய்யப்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது. முதுமக்கள் தாழி மற்றும் பொருட்களை வேதியியல் முறைப்படி சுத்தம் செய்து தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை அருங்காட்சியகத்தில் வைக்க நாகை கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக