சனி, 16 அக்டோபர், 2010

பொலிவு பெறும் தரங்கம்பாடி
பொறையாறு: தமிழகத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களில் ஒன்றாகவும், நாகை மாவட்டத்தின் குறிப்பிடத்தக்க சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகவும்

கருதப்படும் தரங்கம்பாடியை, சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் மேம்படுத்தும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தரங்கம்பாடி என்றாலே நினைவுக்கு வருவது டேனிஷ் கோட்டைதான். கி.பி. 1620-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்தக் கோட்டை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இக் கோட்டையினுள் தொல்லியல் துறை அருங்காட்சியகம் ஒன்றும் உள்ளது.

கி.பி. 1305-ம் ஆண்டு மாறவர்ம குலசேகர பாண்டியனால் கட்டப்பட்ட பிரசித்தி பெற்ற மாசிலாமணிநாதர் கோயில். கி.பி. 1706-ம் ஆண்டில் தரங்கம்பாடிக்கு வந்து தமிழுக்காக பல்வேறு தொண்டுகள் ஆற்றி, முதல் தமிழ் அச்சுக் கூடத்தை நிறுவிய ஜெர்மன் நாட்டின் சீகன் பால்குவின் நினைவுச் சின்னம், அவரது முழு உருவச் சிலை, சியோன் கிறிஸ்தவ ஆலயம், புதிய ஜெருசலேம் ஆலயம், 300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த மசூதி, ஆளுநர் மாளிகை என வரலாற்று ஆர்வலர்களையும், வெளிநாட்டவரையும் கவரக் கூடிய பல இடங்களையும் கொண்டது தரங்கம்பாடி. இதனால், இங்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

ஆனால், இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்குப் போதுமான வசதிகள் இல்லை என்று பரவலாக கருத்து இருந்தது. குறிப்பாக, கடற்கரையோரத்தில் மின் விளக்கு வசதி, கழிவறை, குளியலறை வசதிகள், சுற்றுலாப் பயணிகள் அமர நிழல் குடைகள் போன்ற எதுவுமே இல்லை. இதனால், இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் சிறிது நேரத்திற்கு மேல் தங்க முடிவதில்லை. அதனால், போகிற போக்கில் பார்த்துவிட்டு செல்லக்கூடிய ஓர் இடமாகவே தரங்கம்பாடி இருந்து வந்தது.

இந்நிலையில், சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகப்படுத்தவும், அவர்களுக்கு வேண்டிய வசதிகளை செய்யவும் மத்திய சுற்றுலாத் துறை நிதியின் மூலம் பல்வேறு பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

டேனிஷ் கோட்டை முன் பகுதியில் கிரானைட் கல்களை பதித்து சாலை அமைக்கும் பணி, மின் விளக்குகள், நிழல் குடைகள் அமைக்கும் பணி உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், டேனிஷ் கோட்டையின் உள்புறத்தில் உள்ள தரைப் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் அமர்ந்து கோட்டையை ரசிக்கும் வகையில் புல் தரை அமைக்கவும் தொல்லியல் துறை அனுமதி அளித்துள்ளது.

தரங்கம்பாடி கடற்கரையோரம் அமைந்துள்ள மாசிலாமணி நாதர் கோயில் கடல் நீர் அரிப்பால் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், இந்து சமய அறநிலையத் துறை மூலம் கோயிலையொட்டியும், கடலுக்குள் 50 மீட்டர் நீளத்திற்கும் கருங்கல்கள் கொட்டும் பணி அண்மையில் நிறைவடைந்தது. கோயிலின் பின்புறம் | 26 லட்சத்தில் 10 சன்னதிகள் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. மேலும், பழைய சன்னதி | 3.5 லட்சத்தில் சீரமைக்கப்பட உள்ளது.

மேலும், 1785-ம் ஆண்டு கட்டப்பட்டு சிதிலமடைந்த நிலையில் இருக்கும் டேனிஷ் ஆளுநர் மாளிகை அதன் பழைமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

தரங்கம்பாடிக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்தால், உள்ளூர் மக்களின் பொருளாதார நிலை மேம்படும் என்ற காரணத்தால் உள்ளூர் மக்களின் ஒத்துழைப்போடும், ஆதரவோடுமே எந்த ஒரு வளர்ச்சிப் பணியையும் மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு, நாகை மாவட்ட ஆட்சியர் ச. முனியநாதன் அவ்வப்போது உள்ளூர் மக்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகிறார்.

தற்சமயம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் விரைவாக முடிக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் இருக்கிறது.

மேலும், இங்கு சுற்றுலாப் பயணிகள் வந்து தங்கும் வகையிலான விடுதி இல்லை. அதனால், சாதாரண மக்களும் வந்து தங்கிச் செல்லும் வகையில் விடுதிகள் அமைக்கப்பட வேண்டும். படகு குழாமும் அமைக்கப்பட வேண்டும் என்பதோடு, மேம்பாட்டுப் பணிகள் உள்ளூர் மக்களை எந்த விதத்திலும் பாதிக்க கூடாது என்பதும் இப் பகுதி மக்களின் எதிர்பார்ப்பு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக