ஞாயிறு, 18 ஜூலை, 2010

நாகையில் விடுதலைப் புலிகள் ஊடுருவலா? வெடிபொருட்களுடன் வந்தவர்கள் நோக்கம் என்ன?


நாகப்பட்டினம் : நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே கடல் பகுதியில் ஒதுங்கும் வெடி பொருட்கள் அடங்கிய பார்சல்களில் விடுதலைப் புலிகளின் சீருடை இருந்ததால், விடுதலைப் புலிகள் ஊடுருவியிருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. நாகை மாவட்டம் தரங்கம்பாடி கடல் பகுதியில் கடந்த 8ம் தேதி மிதந்து வந்த மர்ம பார்சலை, சந்திரப்பாடி மீனவர்கள் எடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதில் இரண்டு கையெறி குண்டு, ஏ.கே.47 துப்பாக்கிக்கு பயன்படுத்தும் 153 தோட்டாக்கள், பிஸ்கட், சாக்லெட், மருந்து பொருட்கள், மழை கோட், காக்கி மற்றும் பச்சை நிற யூனிபார்ம் இருந்தன. மருந்து, வெடி பொருட்களில் சீன எழுத்தும், தின்பண்டங்களில் சிங்கள எழுத்தும் இருந்தது.

தரங்கம்பாடி, குட்டியாண்டியூர் கடற்கரையோரம் 10ம் தேதி மர்ம பார்சல் மீனவர்களால் கண்டெடுக்கப்பட்டு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. பார்சலில் கையெறி குண்டு, ஆர்.டி.எக்ஸ். பவுடர், ஏ.கே.47 துப்பாக்கி குண்டு, பெண் கடற்புலிகளின் சீருடைகள் இருந்தன. கடந்த 8ம் தேதி சிக்கிய பார்சலில் ஆண் விடுதலைப் புலி சீருடை, 10 நாட்களுக்கு தேவையான உணவுப் பொருட்களும், 10ம் தேதி சிக்கிய பார்சலில் கடற்புலி- 4005 என்ற அடையாளம் பொறித்த வில்லையுடன், கடற்புலிகளின் சீருடை மற்றும் பெண்கள் அணியும் ஆடைகள் இருந்தன.

இவை ஆண் விடுதலைப் புலி ஒருவரும், பெண் கடற்புலி ஒருவரும் பயன்படுத்தியவை என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. விடுதலைப் புலிகள் தமிழக பகுதியில் இருந்து வெடி பொருட்கள், மருந்துகளை கொள்முதல் செய்து கொண்டு செல்லும் வழியில் தவற விட்டவையா அல்லது சதி திட்டத்துடன் வந்தவர்கள் தமிழக பகுதியில் ஊடுருவும் போது தங்கள் அடையாளங்களை மறைக்க யூனிபார்ம் மற்றும் பொருட்களை கடலில் விட்டுவிட்டு சென்று விட்டனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர்.

முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை சம்பவத்தின் போது சிவராசன், தனு ஆகியோர் வேதாரண்யம் கடல் பகுதியில் ஊடுருவும் போது தங்கள் சீருடைகளை தவிர்த்து விட்டு, பத்திரிகையாளர்கள் போல் தேர்தல் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களின் சதி திட்டத்தை செயல்படுத்தினர் என்பதை போலீசார் சுட்டிக் காட்டுகின்றனர். இந்நிலையில், கடந்த 9ம் தேதி காரைக்கால் தபால் அலுவலக பெட்டியில் நாகை எஸ்.பி., பெயருக்கு ஒரு மர்ம தபால் போடப்பட்டிருந்தது. காரைக்கால் போலீசார், மர்ம தபாலை நாகை எஸ்.பி.,யிடம் ஒப்படைத்தனர். அந்த தபாலில் இரண்டு பேட்டரி, ஒயர் துண்டு, ஒரு கடிதம் இருந்தது.

கடிதத்தில், "திட்டச்சேரி சுற்று வட்டார பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட சிமி இயக்க தீவிரவாதிகள் அடர்ந்த காட்டுப் பகுதியில் ஆயுதப் பயிற்சி எடுத்து வருகிறோம். பல வேடங்களில், பல இடங்களில் சுற்றித் திரிகிறோம். "பொறையாறு அருகே கடலில் மிதந்து வந்த பார்சல், நாங்கள் கடல் வழியாக மூன்று சிமி இயக்க தீவிரவாதிகளுடன் 200 கிலோ கொண்டு வந்தோம். அந்த வெடி குண்டு கடல் சீற்றத்தில் சிக்கி, தவறி விழுந்து விட்டது. இங்ஙனம்: சிமி இயக்க தீவிரவாதிகள், இந்தியன் முஜாகிதீன் பயங்கரவாதிகள், நாகை மாவட்டம், கடல் வழி ஊடுருவல் பயிற்சி கேம்ப், நாகை மாவட்டம்' என குறிப்பிடப்பட்டிருந்தது போலீசாரை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

விசாரணையை திசை திருப்பும் வகையில் வந்த அந்த மர்ம கடிதம் எழுதிய நபர், இது போன்று இரண்டு ஆண்டுகளாக போலீசாருக்கு மர்ம கடிதம் எழுதுவதை வழக்கமாக கொண்டுள்ளவர் என்றும், இவரை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக